அரசியல்
தீர்வு முன்வைக்காவிட்டால் தனியார் துறைகளும் மூடப்படும் அபாயம்! – ரணில் எச்சரிக்கை
நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை மே மாதத்தின் பின்னர் தீவிரமடைந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லாது போகலாம். அதனால் ஜூலை மாதமளவில் தனியார் துறைகளும் மூடப்படலாமென தெரிவித்த அவர், விரைவில் தீர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சபையில் கேட்டுக் கொண்டார்.
” ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது நானும் சுமந்திரனும் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பான இந்த விவாதம் நடைபெறுகின்றது.
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறுவதைப் போன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிதி முகாமைத்துவ வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட விடயங்களே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாக உள்ளது. அதேவேளை நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடமே உள்ளது. சபை அந்த அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். நிதி நிர்வாகம் தொடர்பான சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
நாட்டில் இவ்வாறான நிலைமை உருவாவதற்கான காரணம் என்ன என்று தேடிப்பார்த்து. அதனுடன் தொடர்புடைய நபர் யார் என்று கண்டறிந்து அவருக்கு தண்டனை வழங்க பாராளுமன்றத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய வரவு – செலவுத் திட்டத்தை திருத்தி நிவாரணம் வழங்கும் வகையிலான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரச நிதி குழுவின் அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்.” -என்றும் ரணில் குறிப்பிட்டார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login