தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றதுடன், பொது இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றை வலியுறுத்தினர்.
சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வெள்ளை அணி அணிந்திருந்தனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பவில்லை. ஆட்சி மாற்றத்தையும் வலியுறுத்தவில்லை. மாறாக நாட்டை மீட்பதற்கான தேசிய வேலைத்திட்டம் வேண்டும் என்றே கருத்து வெளியிட்டனர்.
சத்தியாக்கிரக போராட்டத்தின் நிறைவில், எமது நாட்டை ஒன்றிணைந்து காப்போம் என சத்தியப்பிரமாணமும் செய்யப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தில், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ளாதபோதிலும், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.
#SriLankaNews
Leave a comment