கட்டுரை
மலையக பெண்களுக்கு ஏன் அரசியல் தேவை?-புளோரிடா சிமியோன்
பெண்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இருந்த போதிலும் அரசியல் என்றால் என்ன? இந்த கேள்விக்கான பதிலை அறிய முற்படுவதே அரசியல்தான். நம்மை சுற்றி இடம்பெறும் அனைத்து சம்பவங்களும் சமூக நிகழ்வுகளுமே அரசில்தான் என்ற புரிதல் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணங்களை அவரவர் சார்ந்திருக்கும் கட்சி விசுவாசம் காரணமாகவோ மேம்பட்ட அரசியல் உணர்வு காரணமாகவோ உண்மைகளை ஏற்றுக் கொள்வதில் வேறுபடுகின்றோம்.
அரசியல் என்பதைக் கட்சி அமைப்பாக மட்டுமே பலரும் நினைக்கின்றனர். தங்கள் தலைவர் அல்லது தலைவி பற்றியோ கட்சியின் சிறப்பு பற்றியோ பேசுவதே அரசியல் என்றும் தங்களுக்கு எதிராக உள்ள மாற்று அமைப்பினரை வசைபாடுவது இன்னொருவிதமான முக்கிய அரசியல் என்றும் கருதுகின்றனர். இங்கே அரசியல் பேசக்கூடாது என்று கருதப்படுவதும் கூட அத்தகைய மனநிலையில் இருந்துதான்.
ஏன் பொருட்களின் விலை திடீரென அதிகரிக்கின்றது? கூலிக்கேற்ற ஊதியம் எனும் பெயரில் 1000 ரூபா மாதாந்த சம்பளம் பெற்றுதரப்படும் என்று கூறிய அரசியல் தலைமைகள் திடீர் என்று 1500 ரூபா பெற்று தரப்படும் என ஏன் சம்பள போராட்ட உச்சத்தை கேலி கூத்தாக மாற்றி மாற்றி அரசியல் லாபம் தேடுகின்றனர்? தேர்தல் காலத்தில் மட்டும் மக்கள் குறைகளை தேடுவதற்கு காரணம் என்ன? விசேடமாக தேர்தல் காலத்தில் மட்டும் லயன் அறைகளுக்கும் மண்சுவர் வீடுகளுக்கும் உரிமையோடு ஏன் செல்கிறனர்? பெண்கள் மத்தியில் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் உங்களுக்கான சலுகைகள் பெற்று கொடுக்கபடும் என்ற உபதேசங்களை அதிக அக்கறையோடு முன்வைப்பதற்கான காரணம் என்ன? இவை போன்ற பல கேள்விகளையும் அவற்றுக்கான விடைகளை அறிய முயற்சிப்பதையும் உள்ளடக்கியதுதான் அரசியல்!
பெருந்தோட்ட பெண்களுக்கு ஏன் அரசியல்? பெண்களுக்கு அரசியலின் அரிச்சுவடி தெரியுமா? இப்படிபட்ட கேள்விகளும் சந்தேகங்களும் அரசியலுக்கு அப்பாற்பட்ட தோற்றத்தை கொண்டிருந்தாலும் அரசியலுக்குள் உட்பட்டே நிகழ்கின்றன. மலையகத்தில் நிலவும் பெண்ணடிமைத்தனம் சுரண்டல் புதிய மாற்றங்களை உள்ளடக்கிய சமூக நிகழ்வுகள் யாவும் அரசியல்தான். அரசியல் என்பது சமூக நிகழ்வுகள் எனில் அரசு என்பதன் பொருள் என்ன? இந்த சமூகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அநீதிக்கெதிரான கலகத்தை ஒடுக்குகின்ற பலம் பொருந்திய முக்கிய அமைப்புதான் அரசு என்பதில் தெளிவு இருத்தல் அவசியமானது.
ஏனெனில் மலையக சமுதாய எழுச்சியில் பெருந்தோட்ட பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு கட்சியும்,தொழிற்சங்கமும் தேசிய சங்கமிப்பை ஏற்படுத்திக் கொண்டதாக சரித்திரமே இல்லை. இதுதான் உண்மை! ஆனால் இதன் புரிதல் புரியாத புதிராகவே மலையக பெண்கள் மத்தியில் காலங்காலமாக பரிணமித்து வருகின்றது.
எனினும் தந்தை வழி சமூகமைப்பு எனும் கோட்பாட்டின் அடிப்படையில் ஆணாதிக்கத்தின் உச்சம் மேலோங்கி உள்ள நிலையில் மலையகப் பெண்களின் கருத்துக்கள் எந்தவளவிற்கு உள்ளவாங்கப்படுகின்றன என்பதும் சமூக மட்டத்தில் அவர்களுடைய தேவைகள் எந்த அளவிற்கு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இத்தகைய பல வினாக்குறிகள் கோர்த்த வரலாறோடு இணைந்த ஒன்றாகவே மலையக பெண்களின் அரசியல் பங்கேற்பை அல்லது பங்கேற்க முடியாத அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். காரணம் தற்காலத்தில் மலையக பெண்களுக்கான அரசியல் சூழல் உகந்நதாக உள்ளதா என்பதே மிகப்பெரும் கேள்விக்குறிதான்.
ஏனெனில் ஆணாத்திக்க கண்ணோட்டம் நிரம்பியிருக்கும் இந்த சமூக அமைப்பில் பெண்கள் இணைந்து பணியாற்றுவதை சந்தேகக் கண்ணோடு பார்ப்பது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெண் மீது பழிபோடுவதும் அவை உட்கட்சி அரசியல் என்ற முறையில் நாகரிகம் கருதி யாரும் தலையிடாமல் போவதும் பல அமைப்புக்களில் நடக்கவே செய்கின்றது. கட்சி அமைப்பிற்குள் பெண்கள் இயங்குவதை அவர்களது குடும்ப ஆண்கள் அனுமதித்தால் மட்டுமே தொடர முடிகிறது. இந்த தடைகளை மீறி வரும் பெண்கள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகவும் சில குறிப்பிட்ட பொறுப்புக்களில் மட்டும் அங்கம் வகிப்பவர்காக மட்டுமே உள்ளனர். அதிலும் குறிப்பாக அரசியல் கட்சி அமைப்பின் பல பிரிவுகளில் ஒன்றாக “மகளிர் அணி” என்ற பிரிவை உருவாக்கி அந்த அமைப்புக்களை நிர்வகிக்கின்ற பொறுப்புக்கள் மட்டுமே பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் இதனையும் தாண்டி பெண்களுக்கு ஓர் கட்சியினையே நிர்வகிக்க கூடிய வல்லமை இருக்கின்றது என்ற உணர்வை வெளிபடுத்த விடாது உளவியல் ரீதியாக நுட்பமான முறையில் ஆணாதிக்கத்தின் அணுகுமுறை கையாளுகின்றது.
இது ஒருபுறம் இருக்க பெண்ணுரிமை குறித்த எந்தப் புரிதலும் இல்லாத பெருந்தோட்ட பெண்கள் குடும்பப் பெண்களைப் போல அரசியலுக்கு வந்த அடிமைப் பெண்ணாகவே இருக்கின்றனர். பெண்களை அரசியல் தளத்தில் சமமாக மதிப்பதற்கு தலைமைகள் தயாராக இல்லை. மலையகத்தை பொறுத்த மட்டில் பெண்ணின் கணவர் அல்லது தந்தையை சார்ந்தே கட்சி அமைப்புக்களில் பெண்களை பற்றிய மதிப்பும் மதிப்பீடும் உள்ளது. அரசியல் கட்சி பொது கூட்டங்களில் பெண்களின் பெயரை கூட பிரசுரிக்காத கட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அரசியல் மேடைகளில் கடைசிவரை பேச முடியாமல் ஏமாற்றத்தோடு மேடையை விட்டு கீழிறங்கும் பெண்களும் இருக்கிறார்கள். மாலை அணிவிப்தற்கும் ஆராத்தி தட்டு ஏந்துவதற்கு மட்டுமே பெரும்பாலான அரசியல் குழுக்கள் பெண்களை பயன்படுத்துகின்றது. ஏனெனில் ஆண்கள் மட்டுமே நிரம்பி வழியும் அரசியல் மேடைகளில் பெண் இருப்பது மிகக் கடினம் என பெண்களின் தூரநோக்கற்ற சிந்தனையின் உச்சம் தான் இயல்பாகவே இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆகவே மலையக சமூகத்தினை பொறுத்தமட்டில் அது ஆணாதிக்க தாக்கத்தோடுதான் அரசியல் கட்சி அமைப்புக்களும் உள்ளன. இதனால் குடும்பம் குழந்தை பராமரிப்பு பெருந்தோட்ட வேலை என்ற வேலைபிரிவினையோடு இயங்கும் பெண்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி அமைப்புக்களின் முக்கிய இடத்திற்கு வந்து சேர்வதில் பலவகையான தடைகள் இருக்கின்றன. அதனை புரிந்து கொண்டு அரசியலில் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்ய கட்சி அமைப்புக்கள் தமது கொள்கைகளில் மாறறத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இதில் ஆணாதிக்கத்தை தனிப்பட்ட மனிதரின் தவறான கருத்தாகவோ செயலாகவோ கருதுவதைவிட அது சரிப்பாதியாக உள்ள பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள மனோபாவம் என்பதை புரிந்துகொள்வது பொருத்தமாகும். அதை மாற்றுவதற்கான செயலில் சமூகத்தின் அனைத்து ஜனநாயக அமைப்புக்களும் ஈடுபட வேண்டும் என்பதே காலத்தின் வேண்டுகோள்.
ஏனெனில் சமத்துவத்தின் அடிப்படையில் மலையக பெண்களின் அரசியல் பங்களிப்பினை எடுத்து நோக்கினால் முதலில் பெண்களின் குடும்ப கட்டமைப்புதான் அவர்கள் அரசியல் துறையில் நுழைவதனை தடுக்கின்ற பிரதான காரணியாக இருக்கிறது. மறுபக்கம் சமூக செயற்பாடுகளில் ஆண்களே பிரதான சூத்திரதாரிகளாக விளங்க வேண்டும் என்று ஆண்களே வடிவமைத்த பாரம்பரிய சமுதாயக் கோட்பாடுகள் பெண்களை அரசியல் துறையில் நுழைய விடாது தடுக்கும் பிரதான சக்தியாக இருக்கிறது.
இதனால்தான் வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கும் விந்தை மனிதர்களுக்கு எதிராக பாரதி போன்ற சமூக சாரதிப் புலவர்கள் பேனை தூக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. உண்மையில் மலையகத்தில் பெண்களின் அரசியல் ஈடுபாடு குறைந்து காணப்படுகிறதா? அல்லது ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் அரசியல் ஈடுபாடு என்பது குறைக்கப்பட்டதா? என்பது சற்று விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விடயம். காரணம் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியல் தளத்தில் பெண்களின் பங்களிப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது பெருந்தோட்டத்துறை பெண்களே.
ஆனால் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் பெருந்தோட்டத் தேயிலை உற்பத்தியினை பெற்றுத் தரும் தொழிலாழர்களுள் 65 வீதமானவர்கள் மலையகப் பெண்கள். அதிலும் மாறிவரும் உலகில் இவ் வருமானத்துறை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பெருந்தோட்டத்துறை பொருளாதாரம் இன்று வரை நிலைத்திருப்பதன் காரணகர்த்தாக்கள் மலையக பெருந்தோட்டப் பெண்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையோ முட்கள் நிறைந்த காடுகளாய் காணப்படுகின்றன இதனை மாற்றுவது யார்?
இன்றைக்கு இலங்கையில் ஏனைய இன குழுமப் பெண்களின் கல்வி, சமூக, அரசியல், கலாசார, பொருளாதார, சமய நிலையுடன் ஒப்பிடும் போது சகல துறையிலும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருப்பது பெருந்தோட்டப் பெண்கள்தான். ஆனாலும் ஆரம்ப காலங்களை விட சமகால சூழ்நிலை ஓரளவு மாற்றம் அடைந்து இருப்பது மறுப்பதற்கில்லை. இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றகரமான ஒரு போக்கு தொடர்ச்சியாக வடிவமைக்கப்படுகிறது. ஆனால் ஏனைய சமூகப் பெண்களின் அடிப்படையான வளர்ச்சி வேகத்துடன் ஒப்பிடும்போது இவர்களின் இந்த முன்னேற்றப் பாதை திருப்திகரமானதாக இல்லையென்றுதான் கூற முடியும்.
ஏனெனில் பெருந்தோட்டதுறையில் தொழில் புரியும் பெண்கள் தமக்கான சுதந்திரம் மற்றும் உரிமைகளைக் கூட அறியாதவர்களாய் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை அடையளமான பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை கூட இல்லாதோரை அதிகளவில் பெருந்தோட்ட பகுதிகளில் அவதானிக்க முடியும். இதனால் சிலர் தம் ஓய்வூதியத்தை பெற முடியாமல் தவிர்க்கின்றனர். வழங்கப்படும் ஒய்வூதியம் உழைத்த காலத்திற்கேற்ப சரியாக வழங்கப்படுகினறதா என்ற தெளிவு இல்லாமல் கொடுப்பதை மட்டும் வாங்கும் பல அப்பாவி பெண்களும் இருக்கின்றனர். ஏனெனில் விழிப்புணர்வான கல்வி, அறிவு, வலிமை அச்சமின்மை என்பவற்றை ஆண் சமூகத்திடம் அடகு வைத்தவர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர்.
இத்தகைய நிலையில் தமக்கென மரபு ரீதியான மூட நம்பிக்கை மற்றும் சமுதாய கட்டுப்பாட்டினை கொண்டிருக்கும் பல பெண்களில் நூற்றுக்கு 20 வீதமானவர்களே தமது உரிமை தொடர்பில் அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர். அண்மைக் காலமாக இப் பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை சற்று மாற்றமடைந்தும் வருகின்றது. காரணம் பெருந்தோட்டதுறை பெண்கள் தேயிலை பறிக்கும் தொழில் முறையில் இருந்து படிப்படியாக மாற்றங்கண்டு கல்விதுறையில் ஆர்வம் காட்டுவதும் சுயதொழில் முறையில் அக்கறை செலுத்துவதும் அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் அரசியல் என வரும்போது உயர் பதவிகளை வகிக்கின்றளவு ஆளுமைத்தன்மை பெருந்தோட்ட பெண்கள் மத்தியில் உதயமாகவில்லை என்பது வியப்பான ஒன்று.
ஆகவே வளத்திற்கும், வளர்ச்சிக்கும் போராடும் மலையகத்தில், ஆண் தலைமைத்துவத்தினை மட்டும் சந்தித்த மலையகத்தில் எத்தனை தலைமைகளை சிறந்தவர்களாக மலையகம் வெளிக்காட்டி இருக்கின்றது. இவ்வாறு ஆண் தலைமைத்துவமே சரியாக இல்லாத போது எப்படி பெண் தலைமைத்துவம் சாத்தியமாகும். இதனை ஆணாதிக்கம் என்பதா? மனதளவில் பெற்ற முதிர்ச்சி நிலை போதவில்லை என்பதா? உண்மையில் மலையக பெண்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் இந்த துயரங்களை தாண்டிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மலையக பிரதிநிதிகளும் அவர்களை பிரதிநிதிப்படுத்தும் மக்களும் இரு வேறு துருவங்களை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
ஆகவே இத்தகைய நிலையை கடந்து பெருந்தோட்டதுறை பெண்களின் நிலைபாடு அரசியல் அரங்கில் பிரதிபலிக்கப்பட பெருந்தோட்டதுறையை மையப்படுத்திய பெண்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். ஆனால் ஜனநாயகத்தின் யதார்த்தம், மக்களாட்சியை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக தேர்தல்களை கொண்டுள்ளது. அதனை தாங்கி நடாத்தும் தூண்களாக பணம் செல்வாக்கு செலுத்துகின்றது.
இதில் மாயைகளைக்காட்டி வாக்குகளைப் பெறும் ஒரு கலப்பட அரசியலுக்கு மத்தியில் சாமானியமாக பெண்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பது என்பது எட்டாக்கனியாகிக் கொண்டே போகின்றது. இவ்வாறு பணம் முதலிடம் வகிக்கும் ஒரு தேர்தலில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளியாக உள்ள அல்லது ஒரு தொழிலாளியின் பிள்ளை பெண்கள் சார்பாக அரசியலுக்குள் வருவது என்பது எங்கணம் சாத்தியப்படும்.
கோடி கோடியாய் சேர்த்துக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் உண்மையில் மலையக பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பின் இன்றைக்கு எத்தனையோ பெண்கள் அரசியல் பேச வல்லமை மிக்கவர்களாக மாறியிருக்கின்றனர். உயர் கல்வித்துறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயல்பாகவே தலைமைத்துவ பண்பினை கொண்டுள்ளனர்.
அவர்களில் இருந்து வேட்பாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு வாய்ப்பும் தேர்தலுக்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். ஏனைய இனக்குழும பெண்களுக்கு நிகராக தாம் சார்ந்த உரிமைகளைப் பெறுவதற்கு பெருந்தோட்டப் பெண்கள் முன்வர வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் உரிமைகளைத் தவற விட்டால் எத்தனை வரலாறுகள் கண்டாலும் வெறும் பூச்சியமாகவே பெருந்தோட்ட பெண் சமூகம் அடையாளப்படுத்தப்படும்.
எனவே அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பால் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அது ஓர் மனம் சார்ந்த விடயம். மாற்றத்தை நோக்கிய பயணம். ஆகவே ஏனைய இனக்குழும பெண்களைப் போல அரசியலில் ஆர்வம் காட்டி மலையக பெண்களின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க மலையகப் பெணகள் மலையக போட்டி அரசியல் தளத்தில் வெறும் பார்வையாளராக அல்லாது போட்டியார்களாக களம் இறங்கி மலையக பெண் சார்பாக ஒருவரையேனும் நாடாளுமன்றம் அனுப்பி பெண் சரித்திரத்தில் வெற்றி கொள்வோம்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login