vikneshwaran
செய்திகள்அரசியல்இலங்கை

வீரத் தமிழனின் பிறந்ததினம் இன்று – சபையில் நீதியரசர் விக்னேஸ்வரன்

Share

விவசாயிகளினதும் பொதுமக்களினதும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றோம் என்று கூற வந்த அரசாங்கம் அதனை வெளிப்படையாகக் கூறாது சேதன உரத்துக்கு மட்டுமே அரச நிவாரணங்கள் கிட்டும் என்று மறைமுகமாகக் கூற வந்ததின் நோக்கம் என்ன என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜனாதிபதியால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சேதன உரத்துக்கு மட்டுமே அரச நிவாரணங்கள் இனி கிட்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் அசேதன அல்லது இரசாயன உரங்களை இனி யாரும் இறக்குமதி செய்யலாம். ஆனால் அவற்றைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு அரசின் மானிய உதவிகள் கிடைக்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் தற்போது களை கொல்லிகள், கிருமிநாசினிகளையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் இடமளித்துள்ளது. இவற்றை முன்னரே ஆராய்ந்தறிந்து உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கலாம். மக்களுக்கு மன உளைச்சல்களை ஏற்படுத்திய பின்னரே இவற்றைச் செய்வோம் என்று அரசாங்கம் கூறுமாப்போல் இருக்கின்றது.

மாலைதீவோ இந்தியாவோ எமக்கெதிராகத் தாக்குத்தல்களை மேற்கொள்ளமாட்டா. நீங்கள் இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் ஏனைய இனமக்களுக்கு எதிராகத் தான் படையினரைப் பாவிக்கப் போகின்றீர்கள். மக்கள் உங்களை வெறுக்கத் தொடங்க மேலும் மேலும் இராணுவ பலத்தைப் பாவிப்பதற்காகவாபாதீட்டில் பாரிய தொகையை படையினர் சார்பில் செலவிடுகின்றீர்கள்.

இந்தத் தொகைகளில் ஒரு பகுதியையாவது எங்கள் பிறநாட்டுக் கடன்களை அடைக்கப் பாவிக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? ரூபா.308 பில்லியனை ஒரு சிறிய நாடான இலங்கையின் பாதுகாப்புக்கு பாவிக்க முனைவது வியப்பை அளிக்கின்றது.

அண்மையில் அரசாங்க ஊழியர்கள் எமது நிதியில் பெரும் பங்கை எடுத்துவிடுகின்றார்கள் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார். இது தவறு. படையினர் தான் எமது வருமானத்தில் கூடிய பங்கை விழுங்கி வருகின்றார்கள்.

பாதீட்டால் வட கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் குறை தீர்க்க எந்த ஒரு திட்டமும் வகுக்கப்படவில்லை.

நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்று கூறித் திரிந்தால் அது ஏற்படாது. சுய நிர்ணய உரிமைக்குரியவர்களுக்கு சமஸ்டி முறையான ஒரு அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களையும் சமமான முறையில் வரவேற்றால்த் தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என்பதை மறக்காதீர்கள்.

இவ் வாரம் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய வாரம். வீரமரணம் அடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் இவ்வாரத்தினுள் அதி விசேட தினம்.

இத் தருணத்தில் பிரிட்ஸ்காரருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய சுபாஸ் சந்திர போஸ் பற்றி அஹிம்சாவாதியான மகாத்ம காந்தி அவர்கள் கூறிய வாசகங்கள் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்.

“நேதாஜியின் தேசப்பற்று எவர்க்கும் குறைந்ததல்ல. அவரின் வீரம் அவரின் சகல காரியங்களிலும் பளிச்செனப் பிரதிபலிக்கின்றது. அவர் உன்னத குறிக்கோள்களை முன்வைத்தார். ஆனால் தோல்வியுற்றார். ஆனார் யார் தான் தோல்வியைத் தழுவாதவர்கள்?”

இன்னொரு சந்தர்ப்பத்தில் காந்தியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இந்தியாவிற்கு ஆற்றிய அவரின் சேவையின் நிமித்தம் நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார்!”

அஹிம்சையின் பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய பிறந்தநாள் அன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...