மட்டக்களப்பு நகரில் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகருக்கும் பேரணியாக உழவு இயந்திரங்களில் நுழைந்த விவசாயிகளால், நகரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், விவசாயிகளால் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் சுற்றிவளைக்கப்பட்டது.
மட்டக்களப்பு – வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி விவசாயிகள் தமது பிரிவுகளிலிருந்து பேரணியாக இன்று காலை மட்டக்களப்பு நகருக்கு சென்றனர்.
குறித்த பேரணியில், சுமார் 100க்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுடன் கூட்டாக கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தொங்கவிட்டவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு நருக்குள் பேரணி நுழைய முற்பட்ட போது, மட்டக்களப்பு விமான நிலைய சுமைதாங்கி பகுதி மற்றும் ஊரணி சந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, உழவு இயந்திரங்கள் செல்வதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டன.
இதன்போது, பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்த முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அவர்களை உள்ளேசெல்ல பொலிஸார் அனுமதித்த நிலையில், விவசாயிகள் அமைதியான முறையில் கோசங்களை எழுப்பியவாறு காந்தி பூங்கா வரை ஊர்வலமாக, அங்கிருந்து மத்திய வீதியூடாக வாவிக்கரை வீதியை சென்றடைந்தாது. பின்னர் அங்கிருந்து மாவட்டச் செயலகம் வரை பேரணி சென்றது.
அங்கு சென்ற பேரணியை உள்ளே நுழையவிடாது மாவட்டச் செயலகத்தின் வாயிலை பொலிஸார் பஸ் கொண்டு மறித்தனர். இதனால் கோபமடைந்த விவசாயிகள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்போவதாக எச்சரித்த நிலையில் பஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து பொலிஸாரை மீறி மாவட்டச் செயலக வாசல் வரை விவசாயிகள் கோசங்களை எழுப்பியவாறு சென்றனர். இந்தநிலையில் மாவட்டச் செயலக உள் கதவை பூட்டி விவசாயிகளை பொலிஸார் தடுத்தனர்.
இதன்போது மாவட்டச் செயலக வாயிற்கதவை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன், விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் மகஜரையும் பெற்றுக்கொண்ட நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
#SriLankaNews
Leave a comment