11 4
இலங்கைசெய்திகள்

வடக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானி குறித்து ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்

Share

வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு மக்களின் காணிகளைப் பிடுங்கும் நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு – தெற்கு உறவை மேலும் பாதிக்கச் செய்யும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு கோரி ‘காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரம்’ என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு,

மேற்சொன்ன வர்த்தமானி இல: 2,420 சம்பந்தமாக தங்களது கவனத்தை ஈர்க்கின்றேன். இந்த அறிவித்தலின் பிரகாரம் தங்களது உரித்து சார்ந்த கோரிக்கைகளை உரிமையாளர்களும் மற்றவர்களும் வர்த்தமானியின் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்குள் முற்படுத்த வேண்டும்.

இல்லாவிடில் அந்தக் காணிகள் அக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் அரச காணி என்று பிரகடனப்படுத்தப்படும். இந்தக் கட்டளைச் சட்டம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் எமது மக்கள் நூற்றாண்டுகளாக பாவித்து வந்த, ஆனால் தெளிவான உரித்தாவணங்கள் இல்லாத காணிகளை பறிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இச் சட்டம் எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும். எது, எப்படியாக இருப்பினும் வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் ப‌‌‌ல தடவைகள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக தங்கள் நிலங்களில் மீள் குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.

கீழே கூறப்படும் காரணங்களுக்காகவும் வேறும் காரணங்களுக்காகவும் இந்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்படக் கூடாது.

1. பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வை குழப்பியுள்ளதோடு, இன்னமும் அது திருத்தியமைக்கப்படவில்லை.

2. ⁠கட்டாய இடப்பெயர்வுகளாலும் இந்தப் பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமி பேரலையினாலும் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர்.

3. ⁠இந்தக் காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே மரித்த முன் உரித்தாளர்களிடம் இருந்து முறையாக உரிமை மாற்றம் செய்யப்படவில்லை.

4. ⁠பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச் சூழலில் இருந்து தப்பி வெளி நாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவின் தமிழ் நாட்டில் ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின் அனுமதியோடு ஒரு இலட்சமளவிலானவர்கள் வாழ்கின்றார்கள்.

இந்தச் சூழ்நிலையில் இந்த வர்த்தமானியில் கேட்கப்பட்வாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பதென்பது இந்த மக்களால் செய்ய முடியாத ஒன்றாகும்.

இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள், அந்த மாகாணத்தின் மக்கள் என்ற ரீதியில் சட்டத்தின் உரித்தோடு தமது நிலங்களை மீளவும் பெற்றுக்கொண்டு அவற்றைத் தாமாக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுவார்கள்.

இது வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத செயலாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு – தெற்கு உறவை மேலும் பாதிக்கப் பண்ணுவதாகவும் அமையும்.

உண்மையாகவே நாட்டைக் கட்டியெழுப்ப விரும்புகின்ற எந்த அரசும் இதைத் தவிர்க்க வேண்டும். ஆகையால் காலதாமதமின்றி இந்த வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு அவசரமாகக் கோருகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...