நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு
நாட்டின் நிலைமைகளைப் பொறுத்து நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானங்கள் மாறலாம். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுகாதாரத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. – இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம். கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியில் தொடர்ச்சியாக இந்தக் காரணிகளைச் சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஆனால்,கொரோனா செயலணிக் கூட்டத்தில் நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
இதற்கு முன்னரும் நாளாந்தம் மூவாயிரத்துக்கும் அதிகமான கொரோனாத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனையடுத்து நாட்டை முடக்குவது குறித்து ஆரம்பத்தில் தீர்மானிக்காதபோதும் இறுதிநேரத்தில் நாட்டை உடனடியாக முடக்கத் தீர்மானிக்கப்பட்டது. தற்போதும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நிலைமையைக் கருத்திற்கொண்டு தீர்மானங்கள் மாற்றப்படலாம். எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.
Leave a comment