சீனர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சீனத் தூதரகத்தின் அறிக்கை வெளியானது
இலங்கையில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, சீன நாட்டவர்கள் பலர் அண்மையில் கைது செய்யப்பட்ட சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் அதேநேரம், அவர்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு, இலங்கை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட சீன தூதரகம், இந்த சம்பவம், இரண்டு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவில் இதுபோன்ற சம்பவங்களின் நிகழ்வு 2021ஆம் ஆண்டு முதல் குறைக்கப்பட்டுள்ளது என்றும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராட மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளுடன், பலனளிக்கும் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
உலகமயமாக்கலின் சகாப்தத்தில், எந்த நாடும் தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியாது. அந்த வகையில் சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவைக் கொண்டிருக்கின்றன.
அத்துடன், இரண்டு நாட்டு மக்களுக்கும் நன்மைகளை கொண்டு வருவதற்கு, இரண்டு நாடுகளும் எப்போதும் நெருங்கிய நிலையில் செயற்பட்டு வருகின்றன என்றும் சீன தூதரகம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.