இலங்கை
ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து – அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலை
ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து – அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலை
சமகால அரசாங்கத்தில் அமைச்சர்களாக செயற்படும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த இருவரும், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்றனர்.
இருவரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு, அவர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்தது. இதனை எதிர்த்து ஹரின், மனுஷ ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது.