மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
தற்போது வரை 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 ஆயிரத்து 369 பேர் முதலாவது தடுப்பூசியையும், 63 ஆயிரத்து 222 பேர் 2வது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் – என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் 10 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த 5 பேர் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,4 பேர் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் 52 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஒரு நாளைக்கு 9 தொடக்கம் 15 கொரோனாத் தொற்றாளர்கள் வரை அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 7 ஆக குறைவடைந்துள்ளது.
தற்போது நூறு பி.சி.ஆர் அல்லது அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்ற போது சுமார் 5 கொரோனா தொற்றாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 23 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன. இவற்றில் ஆகக்கூடிய மரணம் ஓகஸ்ட் மாதம் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் 10 கொரோனாத் தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.
செப்ரெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
மேலும் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
20 வயதுக்கு மேற்பட்டவர்களில் மொத்தமாக 85 ஆயிரத்து 369 நபர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர். 2வது தடுப்பூசியை 63 ஆயிரத்து 222 நபர்கள் பெற்றுள்ளனர்.
19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகியவர்களுக்கான தனி ஒரு பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக 18,17,16,15 என்ற வயது அடிப்படையில் குறித்த தடுப்பூசி வழங்கப்படும். இவர்களுக்கு ஒரு பைஸர் தடுப்பூசியே வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் வாரம் 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகியவர்களுக்கான தனி ஒரு பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment