மொசாம்பிக் நாட்டுக் கொடியுடன் ஈரான் கடற்பரப்பிற்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பலில் இருந்த 28 இந்தியப் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
‘திஷா’ என்ற குறித்த மசகு எண்ணெய் கப்பல் ஈரானிய கடற்பகுதிக்குள் நுழைந்தபோது, எதிரிப் படைகளால் தாக்குதலுக்கு உள்ளானது. உடனடியாக அந்த கப்பலில் இருந்து ஆபத்து குறித்த அவசர உதவிச் செய்தி அனுப்பப்பட்டவுடன், ஈரானிய கடல்சார் மற்றும் மீட்பு அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
குறித்த, கப்பலில் இருந்த 28 இந்தியர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக இந்தியாவிற்கான ஈரான் தூதுவர் முகமது ஃபதாலி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வெளிநாட்டு கடற்படைகளின் தலையீடு குறித்து எச்சரித்துள்ள அவர், பிராந்தியத்திற்கு வெளியே உள்ள ராணுவப் படைகளின் வருகை இப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தாது என்றும், மாறாக பதற்றத்தையும் சீரற்ற சூழலையுமே அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

