சினிமா கனவுத் தொழிற்சாலை – வியர்வையும் விடாமுயற்சியும் கொண்டு கட்டப்பட்ட இந்த மாபெரும் களத்தில் தம்மை தக்கவைத்துக்கொள்வதற்காக தினமும் போராடும் படைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அளப்பரியது.
ரஜினிகாந்த் எனும் மந்திரச் சொல்லால் ஈர்க்கப்படாத ரசிகர்கள் இல்லையென்று சொல்லும் அளவுக்கு தனது பெயரை நிலைநிறுத்திய நடிகர் ரஜினி. தென்னிந்திய தமிழ் திரையுலகு எப்போதுமே கதாநாயகர்களுக்கு இரட்டை போட்டியினை அமைத்து அழகுபார்ப்பது காலம் காலமாக நிகழ்ந்து வருகின்றது. அதன்படி எம்ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய், சிம்பு – தனுஷ், சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி என நீண்டுகொண்டு போகும் பட்டியலில் பெரும் போட்டித்தன்மைமிக்க பல தசாப்தங்களை மிக நிதானமாக கையாண்டு முன்னணியில் கடந்தவர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்தின் அண்மைய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு ரசிகர்களைத் திருப்திப்படுத்தாமை உள்ளிட்ட பல காரணிகள் குறித்த கேள்விக்கான விதையினைத் தூவி இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.
ரஜினிகாந்தின் ஆரம்ப கால திரைப்படங்களில் அவரது அரசியல் வருகைக்கான பல வசனங்களும் பாடல் வரிகளும் முன்வைக்கப்பட்டு குறித்த வசனங்கள் பலத்த வரவேற்பை பெற்றிருக்கின்றமை அனைவரும் அறிந்ததே. இன்னும் சொல்லப்போனால் குறித்த வசனங்களின் காரணமாக மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குகளுக்கு சென்றிருந்தனர்.
எவ்வாறாயினும் ஒரே அறிவிப்பில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என வெளிப்படுத்தி தனது கோடிக்கும் அதிகமான ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருந்தார் ரஜினிகாந்த்.
அரசியல் களம், உடல்நிலை, ஆதரவு என ரஜினிகாந்தின் அரசியல் மறுப்பு அறிவித்தலுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் இவற்றாலும் ரசிகர்களின் ஏமாற்றத்தை ஈடு செய்ய முடியவில்லை என்பதே உண்மை.
அது மட்டுமல்லாமல் ரஜினிகாந்த்தின் உடல்நிலை தொடர்பில் பல தகவல்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டு வரும் அதேவேளை, ஆபத்தான நிலைகளுடன் சில தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை என்பன அவரது சினிமா பயணம் தொடர்பான கேள்விகளை மேலும் ஆழமாக்குகின்றன.
ரசிகர்கள், நலன் விரும்பிகள், மனிதாபிமானிகளின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒருபுறம் இருக்க சினிமா எனும் அதிவேக பந்தயத்தின் கள நிலவரத்தை அவதானித்தால் தொடர்ந்தும் வெற்றிப்படங்களை வழங்கும் சாத்தியங்கள் ரஜினிகாந்திற்கு உண்டா என்ற சந்தேகம் நிலவுகிறது.
சினிமா ரசிகர்களின் ரசனை மற்றும் மனநிலை முற்று முழுதாகவே மாற்றம் கண்டுள்ள சூழலில், ஓர் கதாநாயக பிம்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஓர் படத்தை வெற்றிபெற செய்வதும் வசூல் வேட்டை நடத்துவதும் மிகவும் கடினமானதாக மாறியுள்ளது.
அது தவிரவும் வர்த்தக சினிமாக்களில் கூட நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை ரசிகர்கள் முற்று முழுதாக எதிர்பார்க்கின்றனர். அவை இல்லாத தமது ரசனைக்குரிய கதாநாயகர்களின் திரைப்படங்களை கூட சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் ஓர் ஆரோக்கியமான ரசிக மனப்பான்மை வளர்ந்து வரும் சூழலில், இன்னும் எத்தனை காலத்துக்கு? என சூப்பர் ஸ்டாரை நோக்கி கேள்விகள் விரைகின்றன.
தொழிநுட்பம் சாமானியர்களை எட்டியுள்ள இக்காலத்தில் தாம் திரையில் பார்ப்பது தமது அன்புக்குரிய கதாநாயகன் அல்ல என்பதை இலகுவாக ஊகித்துக்கொள்ளக்கூடிய ரசிகனுக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றமளிப்பதாக ரஜினிகாந்தின் திரைப்படங்கள் அமைகின்றமை வேதனையான விடயமாகும்.
எது எவ்வாறிருப்பினும் ரஜிகாந்த்தை ஒரு தடவையேனும் இயக்கி விட வேண்டும் என அனைத்து இளம் இயக்குநர்களுக்கும் உள்ள எதிர்பார்ப்பு மற்றும் ரசிகர்களின் மனோநிலை என்பவற்றிற்கு இடையில் ரஜினிகாந்தின் எதிர்கால முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
#Cinema