போதைப்பொருள் சோதனை போல நடித்து கொள்ளை: கேகாலையில் 40 பவுன் தங்கம் திருட்டு – 5 பேர் கைது!

09 A corruption

நாடு முழுவதும் போதைப்பொருள் சோதனையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதனை கொள்ளையர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கேகாலையில் வீடொன்றுக்குள் புகுந்து தங்கம் மற்றும் பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் நேற்று முன்தினம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 9 ஆம் திகதி, கேகாலை திக்கேனா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பொலிஸார் என்று கூறிக்கொண்ட மூன்று பேர் சென்றுள்ளனர்.

வீட்டில் போதைப்பொருள் இருப்பதாகவும், வீட்டை சோதனை செய்ய விரும்புவதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டை சோதனை செய்யும் போலிக்காரணத்தில் கொள்ளையடித்து விட்டு, வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய 40 பவுன் தங்க நகைகள்,1.5 மில்லியன் ரூபாய் பணம், ஒரு மோட்டார் சைக்கிள், 2 கையடக்க தொலைபேசிகள் மற்றும் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 17,500,000 ரூபாய் ரூபாய் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முறைப்பாட்டிற்கமைய, அம்பாறை பகுதியில் 2 சந்தேக நபர்களும், எம்பிலிப்பிட்டியவில் 1 சந்தேக நபரும், கேகாலையில் உள்ள திக்கேன பகுதியில் தங்கியிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், தங்க சங்கிலி மற்றும் 3 தொலைபேசிகள் உட்பட பல திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சந்தேக நபர்கள் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version