தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் மூன்றாம் கட்ட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளில் ஓரங்கமாக , அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் ஒருமித்தக் குரலில் கோரிக்கை விடுப்பதற்கும், அதற்கான ஆவணத்தை தயாரிப்பதற்கு கடந்த நவம்பர் 02 ஆம் திகதி யாழில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அது பற்றி கொழும்பில் நடைபெற்ற 2ஆம் கட்ட சந்திப்பிலும் ஆராயப்பட்டது. இன்று அந்த ஆவணம் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இந்தியாவின் தலையீட்டைகோரும் ஆவணம் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திடம் இன்று கையளிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
#SriLankaNews