தேசிய மக்கள் சக்தியின் (NPP) இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) தெரிவித்துள்ளது.
இன்று மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்ததாவது:
பாடசாலை அதிபர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கில், எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் சாந்த பத்மகுமாரவைக் குற்றவாளியாகக் கண்டு மூன்று மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது.
இலங்கையின் சட்டதிட்டங்களின்படி அவர் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி என்றும், தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலர் விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் தொடர்பான நிதி மோசடி விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் பிரித்தானியா சென்றுள்ளது.
2023 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றபோது, அரசாங்கத்திற்குச் சொந்தமான சுமார் 16.6 மில்லியன் ரூபா பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அழைப்பிதழ்களின் உண்மைத்தன்மை மற்றும் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்காகவே இந்தச் சிறப்பு CID குழு லண்டன் சென்றுள்ளது.
லண்டன் சென்று திரும்பிய அதிகாரிகள் குழு இது தொடர்பான விரிவான அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.