திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பிள்ளையார் ஆலயத்தின் சிதைவுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் ஏனைய கட்டுமானப் பணிகள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று (04) நேரில் சென்று பார்வையிட்டார்.
பிள்ளையார் ஆலயத்தின் சிதைவுகள், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையின் கட்டுமானங்கள் மற்றும் சிலையினை அவர் பார்வையிட்டார்.
தொல்லியல் திணைக்களத்தினால் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஆலயத்தின் தர்மகர்த்தா கோகிலரமணியுடன் அவர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் உடனிருந்தார்.
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயக் காணியில் விகாரை அமைப்பதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அதன் உரிமையாளர் கோகிலரமணியினால் 2019 ஜூலை 29 அன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி பாதிக்கப்பட்ட தரப்புக்காக வாதாடியிருந்தார்.
நீண்ட விசாரணைகளின் பின்னர், 2021 மார்ச் 19 அன்று ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதன்படி, குறித்த பகுதியில் இருந்து சற்றுத் தொலைவில் ஒதுக்கப்படும் 10 பேர்ச் காணியில் பிள்ளையார் கோவிலைக் கட்டி சிலையை நிறுவலாம் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் அங்கு முன்னெடுக்கப்படும் தொல்லியல் அகழ்வுப்பணிகள் மற்றும் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாக அமைந்திருந்தது.