கொழும்பு, பொரள்ளை சஹஸ்புர பகுதியில் பொலிஸ் உத்தரவை மீறிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று (02) வெள்ளிக்கிழமை இரவு பொரள்ளை பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டனர்.
பொலிஸ் உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் வேகமாகச் சென்றதால், அதனைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். எனினும், பின்னால் அமர்ந்து பயணித்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
தப்பியோடிய நபரைத் தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸார், அவரைத் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வேயாங்கொடை பகுதியில் வைத்து இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (03) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.