WhatsApp Image 2021 08 11 at 1.05.00 AM
குற்றம்ஏனையவை

வைரலான வீடியோ – தற்கொலையில் முடிந்த புறாச்சண்டை

Share

வைரலான வீடியோ – தற்கொலையில் முடிந்த புறாச்சண்டை

அண்மையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் 20 வயதேயான இளைஞன் ஒருவன் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புவனேந்திரராசா சுகந்தன் கண்ணாபுரம் நாவாந்துறையைச் சேர்ந்த 20 வயதான இளைஞன். வீட்டில் இரண்டாவது பிள்ளை. ஆரம்பக்கல்வி தொடக்கம் சாதாரணதரம் வரை யாழ். மத்திய கல்லூரியில் கல்வி கற்றான். பின்னர் கிளிநொச்சிக்கு சென்றுவிட்டான்.

அங்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் வர்த்தகப் பிரிவில் பயின்றான். தவணை விடுமுறைகளில் மட்டுமே நாவாந்துறையிலிருக்கும் வீட்டுக்கு வந்து செல்வான். 2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் அவனுக்கு 2S என்ற பெறுபேறே கிடைத்தது. அதன் பின்னர் கிளிநொச்சியை விட்டு, யாழ்ப்பாணத்துக்கே வந்துவிட்டான். அப்படி வந்தவன் எதற்காக தூக்கிட்டு உயிர்மாய்க்க வேண்டும்?

அன்று அதிகாலையில் எழுந்த அவனது தந்தை காலைக்கடன்களை முடித்துவிட்டு, வழக்கம் போல சுவாமி படங்களுக்கு பூவைக்க சென்ற போது சுவாமி அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அப்படி யாரும் அதற்குள் பூட்டிவிட்டு இருப்பதில்லை. கதவில் ஓங்கித் தட்டினார்.

எவ்வித பதிலுமில்லை. சந்தேகம் வலுக்க, தன் பலம் முழுதும் திரட்டி உந்தித் தள்ளினார் கதவை. கதவு ஓவென்று திறக்க, அறையினுள் மகன் சேலையொன்றில் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தான்.
சிலகணங்களிலேயே அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர், ஓடிச் சென்று மகனின் கால்களை தூக்கிப் பிடித்தார். வீட்டில் இருந்த அனைவரும் அங்கு வந்துவிட, ஜன்னலில் ஏறி சேலையை வெட்டி, மகனை மீட்டுக் கொண்டு, யாழ்.போதனா மருத்துவமனைக்கு அவனைக் கொண்டோடினர்.
ஆனால் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டான் என மருத்துவர்கள் கெவிரித்துவிட்டனர். கூடவே ”உயிரிழந்தவருக்கு கொரோனா” என்ற இன்னொரு இடியும் அந்தக் குடும்பத்தின் தலையில் வீழ்ந்தது. அதனை அவர்களால் நம்பமுடியவில்லை. மருத்துவர்களோடும், அதிகாரிகளோடும் தங்கள் மகனுக்கு கொரோனா இல்லையென்று முரண்பட்டனர்.

ஆனால் விஞ்ஞானரீதியான முடிவுகள் அவனுக்கு கொரோனா என்று உறுதியாகக் கூறிய பின்னர் அவர்களால் என்ன செய்யமுடியும்? சடலத்தை சுகாதாரத்துறையினர் பொறுப்பேற்று கோம்பயன்மணல் இந்து மயானத்தில், நெருங்கிய உறவினர்கள் 14 பேர் முன்னிலையில் சுகாதாரமுறைப்படி தகனம் செய்யப்பட்டது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற புறாச்சண்டையும், அதனால் அவனுக்கு உண்டாகிய அவமானப்படுத்தல்களுமே அவனின் தற்கொலைக்கு காரணமென கூறப்படுகின்றது.

சுகந்தனின் நண்பன் ஒருவன் புறா வளர்த்து வருகிறான். அவனது புறாக்களில் ஒன்று, திடீரென ஒருநாள் காணாமல் போய்விட்டது. அவன் சுகந்தன் உட்பட நண்பர்களோடு தனது காணாமல்போன புறாவைத் தேடத் தொடங்கினான். நீண்டநேர தேடுதலுக்கு பின்னர் அயலில் உள்ள வீட்டில் அந்தப் புறா இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அங்கேதான் எழுந்தது பிரச்சினை. “ நாங்கள் அதைக் களவாப் பிடிக்கவில்லை. எங்கட புறா அதை அணைத்துக்கொண்டு வந்துவிட்டது.. நாங்கள் அதைத் தரமாட்டோம்” என்று புறாவை வைத்திருந்தவர்கள் அடம்பிடிக்க, மெதுவாக ஆரம்பித்த வாக்குவாதம் கைகலப்பாகி, அடிதடியில் முடிந்தது. புறாவைப் பிடித்துவைத்திருந்த வீட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு இந்த அடிதடியில் தலையில் காயம். இந்தக் காயம் அந்தப் பகுதி இளைஞர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த, “எங்கட ஏரியாக்கு வந்து சண்டித்தனம் காட்டிறதோ” என்று அவர்கள் தங்கள் பங்குக்கு பிரச்சினையை பெரிதாக்கினர்.

சுகந்தன் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒருநாள் காலை …..

சுகந்தன் வீட்டுக்கு சுமார் பத்துப் பேர் வந்தார்கள். “இண்டைக்கு பின்னேரம் 3 மணிக்கிடையில சுகந்தனைக் கொண்டந்து எங்கட இடத்தில ஒப்படைக்கணும். இல்லாட்டி றோட்டில வெட்டிப்போடுவம். வந்து எடுத்துக்கொண்டு போங்கோ” என வந்தவர்கள் கடுந்தொனியில் எச்சரித்தனர்.

இதன் பின்னர் அமைப்பொன்றின் அங்கத்தவராக இருக்கும் ஒருவர் சுகந்தன் வீட்டுக்குப் போனார். ‘பின்னேரம் 3 மணிக்கிடையில உங்கட மகனை , புறாப்பிரச்சினை நடந்த வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வாங்கோ. அங்க வந்து மன்னிப்புக் கேட்டால் சரி. நான் நிப்பன். அடிக்க விடமாட்டன்” என்று உறுதிமொழி கொடுத்துள்ளார்.

“இதை இப்படியே விட்டால் பிரச்சினை பெரிசாகும். அதால போய் மன்னிப்புக் கேட்டால் பிரச்சினை தீர்ந்திடும்”என நினைத்த தந்தை, சுகந்தனை அன்றுமாலை குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய மற்றைய இளைஞர்களின் தாய்மார்களும் தமது பிள்ளைகளை அங்கே அழைத்து வந்திருந்தனர்.

ஆனால் அங்கே நடந்ததோ வேறு. மன்னிப்புக் கேட்டால் சரி என்று சொல்லிவிட்டு, பெற்றோரை வெளியில் நிறுத்திவிட்டு பிள்ளைகளை வீட்டு வளவுக்குள் அழைத்துச் சென்றார்கள், அங்கே தயார்நிலையில் இருந்த பெண்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். சிலர் கைகளை பிடித்திருக்க பலர் தாக்கியுள்ளனர்.

ஏற்கனவே திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருந்த மிளகாய்த்தூள், பச்சைமிளகாய் கரைசல் என்பவற்றை இளைஞர்களின் முகங்களில் பூசி காடைத்தனம் புரிந்தனர். சுமார் பதினைந்து பெண்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர். இன்னும் சில பெண்கள் நடப்பவற்றை கைபேசியில் வீடியோ பிடித்து ரசித்தனர். வெளியே பெற்றோர் “எங்கட பிள்ளையளை விடுங்கோ” என்று கதறியபோதும் பெண்களின் தாக்குதல் தொடர்ந்தது.

அதன் பின்னர், பெண்களால் இளைஞர்கள் தாக்கப்படும் வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றி தங்கள் வக்கிரத்தை அவர்கள் தீர்த்துக்கொண்டனர். தாங்கள் அவமானப்படுத்தப்பட்டு, அடிவாங்கும் காட்சிகள் பேஸ்புக்கில் வெளியானதும் சுகந்தனும் நண்பர்களும் மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னரே, இருவாரங்கள் கழித்து சுகந்தன் இப்படி ஒரு முடிவை எடுத்தான் என்று சொல்லப்படுகின்றது.

சுகந்தன் உயிரிழந்த பின்னரே, இருவாரங்களுக்கு முன்னர் பூட்டிய வளவுக்குள் பெண்களால் சுகந்தன் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பெற்றோர் முறைப்பாடு செய்தனர். கூடவே அவனோடு தாக்குதலுக்கு இலக்கான சுகந்தனின் நண்பர்களும் அந்தச் சம்பவம் பற்றி முறைப்பாடு செய்தனர். இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுகந்தனின் வீட்டுக்கு வந்து சமாதானம் பேசுவதெற்கென அழைத்த அரசியல் கட்சியைச் சேர்ந்த பெண்மணி, தனது மருத்துவ அறிக்கையைக் காட்டி, கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொண்டுள்ளார். சுகந்தனை சுமார் 15 பெண்கள் தாக்கிய போதிலும் ஐந்து பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுகந்தனின் வீட்டுக்குச் சென்று “மாலை மூன்று மணிக்குள் மகனை அழைத்துவந்து ஒப்படைக்காது விட்டால் வீதியில் வெட்டிப்போடுவோம்” என அச்சுறுத்தல் விடுத்த ஆண்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. அவர்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சுமத்துகின்றனர் அப்பகுதி மக்கள்.

ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் சம்பவ இடத்தக்குச் சென்று, தடயப்பொருள்களை சேகரித்து விசாரணை மேற்கொள்வது வழமை. தூக்கில் தொங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருளையும் பரிசோதனைக்காக எடுத்துச்செல்வர். ஆனால் இன்றுவரை சுகந்தனின் சாவு தொடர்பில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சுகந்தன் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. குடும்பத்தினர் தெரிவிக்காது விட்டாலும் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்படுவது வழமையான நடைமுறை என தெரிவிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் பொலிஸார் ஏன் சுகந்தனின் வீட்டுக்கு போகவில்லை? ஏன் எஞ்சிய சந்தேகநபர்களை கைது செய்யவில்லை? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.

அடித்து துன்புறுத்தல் செய்வதை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சண்டை சச்சரவுகளை தீர்த்துக்கொள்வதற்கு பொலிஸ் நிலையம் இருக்கும் போது அரசியல் கட்சியின் பிரமுகர் மேதாவித்தனமாக இச்சம்பவத்தில் உள்நுழைந்து மன்னிப்புக் கேட்பதற்கென அழைத்தமை தவறானது. சட்டத்தை தனது கையில் எடுத்தமை தவறானது என தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதேவேளை, சுகந்தனுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவனது சடலம் சுகாதாரப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. வீட்டுக்கும் தனிமைப்படுத்தல் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டது. ஆனால் இதுவரை குடும்ப உறுப்பினர்களுக்கோ, அவருடன் தொடர்பிலிருந்த நண்பர்கள், அயலவர்களுக்கோ பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. உயிரிழந்தவரின் முதல் தொடர்பாளர்களைக் கண்டறியும் விசாரணைகள் கூட இடம்பெறவில்லை.

குறித்த பகுதி யாழ். நகரை அண்மித்த பகுதி. அங்கிருந்து பலர் தமது தேவைகளுக்காக யாழ். நகருக்கு வந்து செல்வர். அப்படி வருபவர்களால் புதிய கொரோனாக் கொத்தணி உருவாகும் வகையில், சுகாதாரப் பகுதியினரின் அசண்டையீனமாக நடக்கின்றனர் என மக்கள் விசனப்படுகின்றனர்.

நன்றி

உதயன் – சஞ்சீவி

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...

thumbs b c 5027e373e0f532f509cd40063f3ea6cb
ஏனையவை

லிபியா போலல்லாமல், இலங்கையின் பழமையான ஜனநாயகத்தைப் பேண வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

இலங்கை ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் மிக்க நாடு என்றும், லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை...

2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...