வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் தொல்பொருள் திணைக்களம் திட்டமிட்ட வகையில் நில ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்து வருவதாக சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றைய தினம் (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தொல்பொருள் திணைக்களம் பௌத்த சின்னங்கள் என்ற பெயரில் போலி வரலாறுகளை உருவாக்கி, தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளைக் கையகப்படுத்துகிறது. அவ்விடங்களில் விகாரைகளை நிறுவி, நாட்டை முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது.
இலங்கையில் ஆட்சிக்கு வரும் எத்தரப்பும் இந்த அடிப்படைச் சிங்கள பௌத்த கொள்கையில் மிகவும் உறுதியாகவே உள்ளன. தற்போதைய அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் இதில் மாற்றமின்றிச் செயல்படுவதை அண்மைய சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்தத் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்தத் தமிழர்கள் அனைவரும் கட்சி மற்றும் ஏனைய பேதங்களை மறந்து ஓரணியில் திரள வேண்டும்.
தையிட்டி விகாரை தொடர்பான போராட்டங்கள் மற்றும் மல்லாகம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, நயினாதீவு விகாராதிபதி தையிட்டி விகாரைக்கு விஜயம் செய்தமை மற்றும் அங்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், சட்டத்தைக் கையில் எடுக்கும் செயலாகவும் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தையிட்டி விகாரைக்கு முன்பாகத் தற்போது மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், வேலன் சுவாமிகளின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.