சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படத்தை இயக்கப்போகும் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் இப்படத்தைச் சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கதையில் சில மாற்றங்கள் செய்யும்படி ரஜினிகாந்த் கூறியதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகினார்.
தற்போது ‘டான்’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ரஜினி – அனிருத் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022-ஆம் ஆண்டிலேயே சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்திடம் ஒரு கதையைக் கூறி அவரை ஈர்த்திருந்த நிலையில், தற்போது அந்தக் கதையை ரஜினி மற்றும் கமல் தரப்பு உறுதி செய்துள்ளதாகத் தெரிகிறது.
‘தலைவர் 173’ திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜூன் 2026-இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒரு படத்தில் (நடிகராகவும் தயாரிப்பாளராகவும்) இணைவதால், கோலிவுட்டில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.