வெளிநாடுகளில் ஆச்சிரமங்கள் – நித்யானந்தா புதிய திட்டம்

swami nithyananda

சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர் அங்கிருந்தபடி பல்வேறு நாடுகளிலும் உள்ள அவரது சிஷ்யர்கள், பக்தர்களிடம் பேசி வருகிறார்.

இதுவரை கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற பல யூகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது தொடர்பாக புதிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, பசுபிக் பெருங்கடல் பகுதியில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றில் தான் கைலாசா அமைந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், கைலாசா நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தாக கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க் நகரம், கைலாசா இடையே ஒப்பந்தம் கையெழுத்திடுவது போன்ற புகைப்படங்களை அவரது சீடர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர்.

ஏற்கனவே இதுபோன்று ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள சில நகரங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் உள்ள நகரங்களுடன் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை செய்திருப்பதாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து பல நாடுகளிலும் உள்ள பெரிய நகரங்களுடன் உறவை மேம்படுத்தி வரும் நித்யானந்தா அந்த நாடுகளில் இருந்து கைலாசாவுக்கு முதலீடுகளை ஈர்த்து வருமானத்தை பெருக்குவதற்காக திட்டங்களையும் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில கோவில்களை நித்யானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல நாடுகளில் தனது ஆச்சிரமங்களை திறக்கவும் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முதலீடுகள் மூலம் கைலாசாவில் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக திட்டங்களையும் அவர் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, வருகிற 18ம் திகதி மகா சிவராத்திரி விழாவை கைலாசாவில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

கடந்த 5ம் திகதி தைப்பூசம் கைலாசாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா இருக்கும் மகா கைலாசாவில் மட்டுமின்றி பெங்களூரு, திருவண்ணாமாலை உள்பட பல இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களிலும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

#world

Exit mobile version