உக்ரைனுக்கான 500 மில்லியன் யூரோ உதவி தொகை: தடுத்து நிறுத்திய ஐரோப்பிய நாடு
உக்ரைனுக்கு கிடைக்க வேண்டிய 500 மில்லியன் யூரோவை ஹங்கேரி தடுத்து நிறுத்தியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாத கணக்கில் நடைபெற்று வருகிறது, இதில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் அராஜகமான நடவடிக்கையால் அழிவுக்கு உள்ளாகி வரும் உக்ரைனை பாதுகாப்பதற்காக மேற்கத்திய உலகம் தொடர்ந்து ராணுவ மற்றும் நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் உக்ரைனின் ராணுவ உதவிக்காக ஒதுக்கிய 500 மில்லியன் யூரோக்களை ஹங்கேரி தடுத்து வைத்துள்ளது.
ஹங்கேரிய நிறுவனங்களை போரின் ஆதரவாளர்களின் பட்டியலில் சேர்க்க மாட்டோம் என்ற உக்ரைனின் வாக்குறுதியை இன்னும் ஹங்கேரி பெறவில்லை என இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஹங்கேரியன் OTP வங்கியை இந்த பட்டியலில் இருந்து உக்ரைன் விலக்கி இருந்தது. ஆனால் இந்த முடிவு நிரந்தரமானதாக வேண்டும் என்பதால் சட்டரீதியான உத்தரவாதங்களை உக்ரைனிடம் இருந்து ஹங்கேரி எதிர்பார்க்கிறது.