உலகம்
முன்பே வந்திருந்தால் மூச்சு முட்டியிருக்கும்! – ஆவேசமடைந்த கமல்ஹாசன்
எண்ணூர் எண்ணெய் கசிவை ஆய்வு செய்த ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் கழிவுகளை நீக்கி, நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பலத்த மழையின்போது, தொழிற்சாலையில் இருந்து கச்சா எண்ணெய் கழிவு மழைநீருடன் கலந்து, பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகத் தாழ்வான பகுதிகளில் படிந்துள்ளது.
எண்ணூர் கடலிலும் இந்த கழிவுகள் கலந்ததால், 20 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவு படிந்ததால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். அப்போது அவர் ஆவேசத்துடன் இது மனிதர் செய்த தவறு என்றார்.
மேலும் எண்ணெய் கழிவை சுத்தம் செய்ய வேண்டியது மீனவர்கள் அல்ல, அதற்கு Technicians தேவை என காட்டமாக கூறினார்.
அத்துடன் செய்திகளிடம் பேசிய அவர், ‘பலமுறை இங்கு வந்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் இது மேம்படும் என்று நம்பி தான் இங்கே வருகிறேன். ஆனால், 7 ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் மோசமாக தான் மாறியிருக்கிறது.
நீதிமன்றம் 17ஆம் திகதிக்கு இதனை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியது. இன்று 17ஆம் திகதி. இன்னும் சுத்தம் செய்யப்படவில்லை, மேலும் 17 நாளில் கூட சுத்தம் ஆகாது.
பாத்ரூம் பாக்கெட்டை மீனவர்களிடம் கொடுத்து நீங்கள் அள்ளிடுங்கள் என்று கூறுவது மனிதம் அற்ற செயல். இந்த மாதிரி உயிர்கொல்லி வேலைகளை செய்பவர்களுக்கு பெரும் தண்டனையை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
அப்போது தான் பயப்படுவார்கள். மீனவர்களின் வாழ்க்கைக்கு என்ன ஆதாரம் என்ற வாக்குறுதியை அரசு கொடுக்க வேண்டும். அதற்கு முன்பாக தப்பு செய்தவர்கள் சுத்திகரிப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன்பு நான் வந்திருந்தால் உங்களுடன் பேசியிருக்க முடியாது. இருமல் வந்திருக்கும், மூச்சு முட்டியிருக்கும்’ என கூறினார்