யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் இன்று (டிசம்பர் 7) மாலை நீராடச் சென்ற கொக்குவில் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பண்ணைக் கடலில் நால்வர் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்கள் திடீரெனச் சுழியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகப் பொலிஸாரின் உதவியுடன் நீரில் மூழ்கிய நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய இருவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அனர்த்த நிலைமைகள் தணிந்திருந்தாலும், கரையோரப் பகுதிகளில் நிலவும் அபாயங்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.