சீரகத் தண்ணீர்– பேரழகு ரகசியம்
எமது உடலின் பாகங்களை சீர்செய்வதாலேயே சீரகம் என சொல்லப்படுகிறது. அத்துடன் தற்போதைய கொவிட் காலத்தில் எமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்தாகவும் சீரகம் காணப்படும்.
சீரகத்தை தண்ணீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் அதன் பலன்கள் நேரடியாக எமது உடலில் சேர்கின்றன.
சீரகத் தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளை எமது உடலுக்கு அளிக்கின்றது. இது சக்கரை அளவை சீராக்குகிறது. அத்துடன் கொழுப்பின் அளவை குறைத்து ஆரோக்கியமான சீரான சருமத்தை அளிக்கிறது.
அதிகப்படியான உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கும், தட்டையான வயிற்றைப் பெறுவதற்கும், நீங்கள் இந்த அதிசய பானத்தை அருந்தி வந்தாலே போதும். நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள்.
செரிமானப் பிரச்சினைக்கு
சீரகத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சினைகளை நீக்குகிறது. அத்துடன் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் செரிமான அமைப்பை சரியான பாதையில் வைத்திருக்கவும் உதவுகிறது.
வயிற்றுப்போக்கு, குமட்டல், வாய்வு போன்ற நோய்களை விரட்டி விடும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. எந்த நோயும் உங்களை அண்டவிடாமல் காக்கிறது.
இரத்தசோகையை நீக்கும்
சீரகத்திலுள்ள இரும்புச் சத்து இரத்தச்சோகை வரவிடாது தடுக்கிறது. இது சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதுடன் இரத்த ஓட்டத்தில் ஒட்சிசன் கொண்டுசெல்லும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நன்றாக தூங்க உதவுகிறது
நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் இந்த சீரகத் தண்ணீரை தவறாமல் உட்கொண்டு வந்தால் ஆழமான தூக்கத்தை ஊக்குவிக்கும். இதனால் தூக்கமின்மை தொடர்பான பல்வேறு நோய்களில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.
கூந்தலுக்கு ஆரோக்கியம் தரும்
அடர்த்தியான கூந்தல் பெற சீரகத்தண்ணீர் சிறந்த மருந்தாகும். இதிலுள்ள விற்றமின்கள், தாதுக்கள் உங்கள் தலைமுடியின் வேர்களை வலுவாக்குகின்றன. இதன் மூலம் ஆரோக்கியமான கூந்தலை பெறுவீர்கள். கூடுதல் பிரகாசத்தையும் உங்கள் கூந்தலுக்கு வழங்குகிறது.
Leave a comment