யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12) இடம்பெற்ற பயங்கர வன்முறைச் சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கொட்டடியம்பதி, தொல்புரம் பகுதியைச் சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். மேலும், ச. ரஜீவன் மற்றும் க. பானுஷன் ஆகிய இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த தீராத தனிப்பட்ட பகைமையே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த சந்தேகநபர் அங்கிருந்தவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முதலில் பானுஷன் என்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது, தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை மயூரன் பிடிக்க முற்பட்டபோது, மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் சந்தேகநபர் மயூரனைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மயூரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைப் பிடிக்க வட்டுக்கோட்டை பொலிஸார் விசேட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

