மனித நாகரிகத்தின் தொடக்ககால கலைத்திறனைப் பறைசாற்றும் வகையில், உலகின் மிகப்பழமையான குகை ஓவியத்தை இந்தோனேசியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் கடற்கரையோரம் அமைந்துள்ள முனா தீவில் (Muna Island) உள்ள ஒரு சுண்ணாம்புக் குகையில் இந்த ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குகை சுவரில் சிவப்பு நிறப் பாறை நிறமிகளைக் கொண்டு மனிதக் கைகளின் அச்சுக்கள் (Hand Stencils) பதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பறவைகளின் தலை மற்றும் விலங்குகளின் உடலமைப்பைக் கொண்ட விசித்திரமான மனித உருவங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதுவரை ஸ்பெயினில் கண்டறியப்பட்ட 66,700 ஆண்டுகள் பழமையான ‘நியண்டர்தால்’ கை அச்சுகளே உலகின் மிகப்பழமையானதாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது இந்தோனேசியாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த ஓவியம், அதைவிட சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானது என்பதால், மனித குலத்தின் கலை வரலாறு ஆசியாவிலிருந்தே தொடங்கியிருக்கலாம் என்ற புதிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் இயற்கை நிறமிகளை ஊற்றி அல்லது ஊதி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில கை விரல் நுனிகள் கூர்மையாகத் தெரியும் வகையில் வேண்டுமென்றே மாற்றியமைக்கப்பட்டுள்ளமை அன்றைய மனிதர்களின் தனித்துவமான கலை உணர்வைக் காட்டுகிறது.