அமெரிக்காவை உறைய வைத்த ஃபெர்ன் பனிப்புயல்: 12 பேர் உயிரிழப்பு; 13,000 விமானங்கள் ரத்து; அவசரநிலை பிரகடனம்!

MediaFile 5 4

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான குளிர்காலப் புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் “ஃபெர்ன்” (Winter Storm Fern) பனிப்புயல், அந்நாட்டின் பெரும் பகுதியை நிலைகுலையச் செய்துள்ளது. டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரையிலான சுமார் 2,000 மைல் தூரத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புயலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லூசியானாவின் கடோ (Caddo Parish) பகுதியில் தாழ்வெப்பநிலை (Hypothermia) காரணமாக இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் குளிரினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், நியூயார்ய்க் நகரில் கடுமையான குளிரால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

நேற்று (25) நிலவரப்படி, சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. டென்னிசி, லூசியானா மற்றும் மிசிசிப்பி ஆகிய மாநிலங்கள் மிகக் கடுமையான மின்வெட்டை எதிர்கொண்டுள்ளன.

விமானப் போக்குவரத்து: பனிப்புயல் மற்றும் உறைபனி மழையால் நாடு முழுவதும் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு டஜன் மாநிலங்களில் கூட்டாட்சி அவசரநிலையை (Federal Emergency) அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரை சுமார் 21 மாநிலங்களில் அந்தந்த மாகாண அரசுகள் அவசரநிலையை அமல்படுத்தியுள்ளன.

சுமார் 180 முதல் 230 மில்லியன் அமெரிக்கர்கள் (நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர்) கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காலப் புயல் எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.

இந்த அதீதக் குளிருக்கு ‘துருவச் சுழல்’ (Polar Vortex) எனப்படும் ஆர்க்டிக் காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வழக்கத்திற்கு மாறாக தெற்கு மாகாணங்களிலும் வெப்பநிலை 15-20°C வரை குறைந்து காணப்படுகிறது.

 

 

Exit mobile version