ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரும் கன மழை

24 661ed03763aed

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரும் கன மழை

ஐக்கிய அரபு அமீரகத்தின்(United Arab Emirates) பெரும்பாலான பகுதிகளில் மோசமடைந்துள்ள காலநிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலை ஆய்வு மையத்தினால்(NCM) சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தொடரும் கன மழையுடனான காலநிலையால் சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும், சில பகுதிகளில் செம்மஞ்சள் எச்சரிக்கையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காலநிலை இன்றையதினம் (17) வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதுடன் குடியிருப்பில் இருந்தே பணியாற்றும்படி அரச ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, தனியார் பாடசாலை மாணவர்களுக்கும் குடியிருப்பில் இருந்தே கல்வியை தொடர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துபாய் விமான நிலையத்தில் இருந்து சேவை முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் திருப்பி விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 45 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில், பலத்த மழை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 21 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன் தரையிறங்கவிருந்த 24 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 3 விமானங்கள் அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் விமான சேவையில் தாமதம் அல்லது ரத்து உள்ளிட்டவை இன்று(17) பகல் வரையில் நீடிக்கலாம் என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, துபாய் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளமையினால் பதிவு செய்துள்ள பயணிகள் முறையானத் தகவலைப் பெற்று பயணத்தை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version