ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், ரஷ்யாவுக்குத் தமது நிலப்பகுதியை விட்டுக் கொடுக்காத வகையில் ஒப்பந்தம் அமைந்துள்ளது என்பதாகும்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, எந்த நிலத்தையும் ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க முடியாது என்றும், அது உக்ரைன் அரசியல் சட்டத்திற்கும் சர்வதேச சட்டத்திற்கும் முரண்படும் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய மற்றும் நேட்டோ தலைவர்களைச் சந்தித்த பின்னர், அமெரிக்காவுக்குத் தமது புதிய திட்டத்தை விரைவில் அனுப்பலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின்படி, ரஷ்யாவுக்கு உக்ரைனின் நிலத்தை விட்டுக் கொடுக்கும் அம்சம் இடம்பெற்றிருந்தது.
அமெரிக்கா முன்வைத்த 28 அம்ச அமைதி முன்மொழிவு உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த முன்மொழிவு ரஷ்யாவுக்குச் சாதகமானது என்றும் அந்த நாடுகள் விமர்சனம் வெளியிட்டுள்ளன.

