பெண்ணின் போட்டோவை ஆபாசமாக அனுப்பி டார்ச்சர்
தமிழக மாவட்டம், திருச்சியில் ஒன்லைன் லோன் அப்பின் மூலம் கடன் வாங்கிய பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய கணவர் கூலி தொழில் செய்து வருகிறார். இதனால் வருமான பற்றாக்குறையால், கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஒன்லைன் அப் ஒன்றில் ரூ.7,000 கடன் வாங்கியுள்ளார்.
பின்பு, அக்டோபர் 02 ஆம் திகதி பெற்ற கடனுக்கான தவணை மற்றும் முழுத்தொகையினையும் கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் செயலி நிறுவனத்தில் இருந்து இந்த பெண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது இவர், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறியுள்ளார்.
அதற்கு, ரசீதை அனுப்புமாறு செயலி தரப்பில் இருந்து கூறப்பட்டது. அதனால், வாட்ஸ் அப் எண்ணிற்கு ரசீதை அனுப்பி வைத்தார்.
பின்பு, பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், பெண்ணின் போட்டாவை ஆபாசமாக சித்தரித்து அனுப்பப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, போட்டோ அனுப்பிய ஒன்லைன் செயலி நம்பருக்கு அழைத்த போது, கடன்வாங்கிய முழு தொகையையும் செலுத்தவில்லை என்றால் இந்த படத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், திருச்சி மாநகர சைபர் க்ரைம் பொலிசில் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.