ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்முறையாக தலிபான் அமைப்பின் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, மக்கள் முன் தோன்றி ஆதரவாளர்களிடம் உரையாற்றியுள்ளார்
தலிபான் அமைப்பின் அதிஉச்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார்.
இதன் காரணமாக இறந்துவிட்டதாகக் கூட கூறப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமையன்று, ராணுவ வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக அகுந்த்ஸடா தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவுக்கு சென்றதாக தலிபான் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புகைப்படமோ விடியோவோ எடுக்கப்படவில்லை. ஆனால், அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட வீடியோவில் தலிபான் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. அமீருல் மொமினீன் என்றழைக்கப்படும் அகுந்த்ஸடா, அங்கு மதம் தொடர்பாகவே பேசியுள்ளார்.
அரசியல் குறித்து அவர் பேசவில்லை ஆனால் போரில் உயிரிழந்த, படுகாயம் அடைந்த தலிபான்களுக்காக அகுந்த்ஸடா பிரார்த்தனையில் ஈடுபட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு, அமெரிக்க நடத்திய ட்ரோன் தாக்குதலில் அப்போது தலைவராக இருந்த முல்லா அக்கர் மன்சூர் கொல்லப்பட்டதை அடுத்து அகுந்த்ஸடா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment