ஆதாரங்களற்ற ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டு இலங்கையர்களைத் துருவமயப்படுத்தும்- அலி சப்ரி கண்டனம்!

download 3 1 11
கனேடிய பிரதமரின் கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரிப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எவ்வித ஆதாரங்களுமின்றி முன்வைக்கப்படும் ‘இனப்படுகொலை’ தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இலங்கையர்களைத் துருவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘மனித உரிமைகள், சமாதானம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை விட்டுக்கொடுத்துவிடமுடியாது என்பதற்கான நினைவூட்டல்களாகப் போரினால் பாதிக்கப்பட்ட கனேடியத் தமிழர்களின் கதைகள் உள்ளன. எனவே போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் இலங்கையர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய செயற்பாடுகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது’ என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பதில் அறிக்கையொன்றை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு, இலங்கையின் கடந்தகால மோதல்கள் தொடர்பில் மிகமோசமான விடயங்களை உள்ளடக்கி கனேடிய பிரதமரால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி இதுகுறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுக்கு  வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சு அழைப்புவிடுத்தது.அதன்படி வெளிவிவகார அமைச்சில் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கையைக் கண்டித்து நிராகரித்துள்ளார்.
‘அரசியல் உள்நோக்கம்கொண்ட இந்த அறிக்கை பிரிவினையை ஏற்படுத்துகின்றது. சுமார் 3 தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் நாட்டில் நீடித்துவந்த பயங்கரவாத மோதல்கள் தொடர்பில் கருத்துவெளியிடுகையில், எவ்வித ஆதாரங்களுமின்றி ‘இனப்படுகொலை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையை நாம் கடுமையாக மறுக்கின்றோம். பொருளாதார ஸ்திரத்தன்மை, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு அரசாங்கம் செயற்பட்டுவரும் தற்போதைய சூழ்நிலையில், கனேடிய பிரதமரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள தவறானதும் ஆத்திரமூட்டும் வகையிலானதுமான குற்றச்சாட்டுக்கள் இலங்கையர்களைத் துருவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும்’ என்றும் அமைச்சர் அலி சப்ரி கனேடிய உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் ‘இனப்படுகொலை’ என்ற பதத்தின் பிழையானதும் தன்னிச்சையானதுமான பிரயோகத்துக்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலைக்கொண்ட, இலங்கை எதிராக அரசியல் ரீதியில் தூண்டப்பட்ட ஒரு சிறிய பிரிவினரே உந்துதல் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#world
Exit mobile version