பயங்கரவாதிகளை நரகத்திற்கு அனுப்பிவிட்டோம்! பாகிஸ்தான் இராணுவம் பரபரப்பு அறிக்கை
பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்தின் மீது அதிக ஆயுதம் ஏந்திய 9 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அதற்கு இராணுவத்தினர் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவம் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர் என தெரிவித்துள்ளது.
அத்துடன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பயன்படுத்தப்படாமல் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களில் குறைந்தது 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சில மணிநேரங்களுக்கு பிறகு பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், TTPயின் (தெஹ்ரீக்-இ-தலிபான்) துணை அமைப்பாக புதிதாக தோன்றியுள்ள TJP என்ற அமைப்பு விமானப்படை தளம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இடைக்கால பிரதமரான அன்வாருல் ஹக் கக்கர், ‘எங்கள் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த முயற்சியும் அசைக்க முடியாத எதிர்ப்பை சந்திக்கும்’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.