அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் “ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாகத் தனது ‘TruthSocial’ தளத்தில் பதிவிடுவதற்குச் சரியாக 15 நிமிடங்களுக்கு முன்னதாக, சர்வதேச மசகு எண்ணெய் சந்தையில் சுமார் 580 மில்லியன் டொலர் (அரை பில்லியன் டொலருக்கும் அதிகம்) பெறுமதியான வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்த விசித்திரமான நேரக் கணக்கீடு, நிதிச் சந்தையில் “உள்வழி வர்த்தகம்” (Insider Trading) குறித்த பாரிய சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் (Financial Times) செய்தி வெளியிட்டுள்ளது.
புளூம்பெர்க் (Bloomberg) தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நியூயார் நேரப்படி நேற்று காலை 6:49 மணி முதல் 6:50 மணிக்குள் — அதாவது ட்ரம்ப்பின் பதிவு வெளியாவதற்குச் சற்று முன்னதாக — சுமார் 6,200 பிரெண்ட் (Brent) மற்றும் மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) எண்ணெய் ஒப்பந்தங்கள் கைமாறியுள்ளன. இந்த வர்த்தகம் நடைபெற்ற 27 வினாடிகளில் சந்தை வால்யூம் (Volume) திடீரென அதிகரித்துள்ளதுடன், அமெரிக்கப் பங்குச் சந்தைக்கான (S&P 500) முன்கூட்டிய ஒப்பந்த விலைகளும் உயரத் தொடங்கியுள்ளன.
ஜனாதிபதி ட்ரம்ப் காலை 7:04 மணிக்கு ஈரானுடனான இணக்கம் குறித்துப் பதிவிட்டவுடனேயே, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்தது. போர் பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பால் விலை குறையும் என்பதை முன்கூட்டியே கணித்து, 15 நிமிடங்களுக்கு முன்னரே வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் இதன் மூலம் கோடிக்கணக்கான டொலர்களை லாபமாக ஈட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எந்தவிதமான பொருளாதாரத் தரவுகளும் வெளியாகாத ஒரு நேரத்தில், இவ்வளவு பெரிய தொகை வர்த்தகம் செய்யப்பட்டது “இயல்பற்றது” என 25 ஆண்டு அனுபவம் வாய்ந்த சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோன்ற மர்மமான வர்த்தகங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக அல்ஜசீரா (Al Jazeera) தெரிவித்துள்ளது. குறிப்பாக, வெள்ளை மாளிகையின் முக்கிய அறிவிப்புகள் வெளியாவதற்கு முன், ‘Polymarket’ போன்ற பந்தயத் தளங்களில் பெரிய அளவிலான பந்தயங்கள் கட்டப்படுவது குறித்துச் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அரசாங்க இரகசியங்கள் முன்கூட்டியே கசிந்து வர்த்தகர்களுக்கு லாபமாக மாறுகிறதா என்ற கேள்வியும், இது குறித்த முறையான விசாரணைகளுக்கான தேவையையும் சர்வதேச நிதி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஈரான் தரப்பு இந்தப் பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ள நிலையில், இந்த 15 நிமிட மர்மம் நிதி உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

