உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, 2026 ஜனவரி மாத இறுதியில் இருந்து விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமான நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணைக்குழு (ICA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் விபரங்கள் மற்றும் ஆவணங்களை விமான நிறுவனங்கள் முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். ICA அதனை ஆய்வு செய்த பிறகு, தகுதியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள். உரிய ஆவணங்கள் இல்லாத பயணிகளை அவர்கள் புறப்படும் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உரிய விசா அல்லது ஆறு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு அனுமதி கிடையாது. சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான டிக்கெட் எடுப்பதற்கு முன், ICA தளத்தின் (ICA Feedback Channel) வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ICA நேரடியாக அனுமதி அளிக்கும் வரை பயணத்தைத் திட்டமிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளைப் பின்பற்றத் தவறும் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ICA எச்சரித்துள்ளது. விதிகளின்படி நடக்காத விமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
தகுதியான ஆவணங்கள் இல்லாத பயணியை அனுமதித்த விமான நிறுவன ஊழியர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

