அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் குழு வியக்கத்தக்க புதிய தகவல்களைக் கண்டறிந்துள்ளது.
விஞ்ஞானிகள் ‘உயர் தெளிவுத்திறன்’ (High-resolution) கொண்ட அதிநவீன செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, பனியை ஊடுருவி ஆய்வு செய்துள்ளனர்.
இந்தப் புதிய வரைபடத்தின் ஊடாக அண்டார்டிகா பனிக்கடியில் ஆயிரக்கணக்கான மலைகள், பாறைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் பரந்த சமவெளிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பூமியின் ஏனைய கண்டங்களைப் போன்றே ஒரு செழுமையான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு வெறும் புவியியல் ஆய்வு மட்டுமல்லாது, உலகளாவிய சூழலியல் மாற்றங்களைக் கணிக்கவும் பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பனிக்கடியில் உள்ள நிலப்பரப்பின் அமைப்பு, பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கும் வேகத்தைப் பாதிக்கக்கூடியது. இதனை அறிவதன் மூலம் எதிர்காலக் கடல் மட்ட உயர்வை துல்லியமாகக் கணிக்க முடியும்.
புவி வெப்பமடைதலால் அண்டார்டிகா சந்திக்கும் மாற்றங்களை முன்கூட்டியே எச்சரிக்க இந்த விரிவான வரைபடம் ஒரு வழிகாட்டியாக அமையும்.
பனி மூடியிருப்பதால் இதுவரை மனிதக் கண்களுக்குத் தெரியாமல் இருந்த ஒரு புதிய கண்டத்தின் உண்மையான முகம் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது அண்டார்டிகா குறித்த மனிதனின் பார்வையை முற்றாக மாற்றியமைக்கும் என ஆய்வுக் குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.