கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வெளியான தகவல் பெரும் ஆறுதலை அளித்தது.
கத்தாரில் உள்ள Dahra Global என்னும் நிறுவனத்தில் பாதுகாப்பு சேவை வழங்கும் பணியில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
கடந்த ஆண்டு, அதாவது, 2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், அவர்களை கத்தார் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட விடயமே அவர்களுடையகுடும்பத்தினருக்கு அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், அந்த எட்டு இந்தியர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கத்தார் அரசு அறிவித்தது நாட்டையே அதிரவைத்தது.
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், சம்பந்தப்பட்டவர்களை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்தது. அதைத் தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த எட்டுபேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை கத்தார் நீதிமன்றம் ஒன்று குறைத்துள்ளதாக கடந்த வாரம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டுபேரின் தண்டனையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்களுடைய மரண தண்டனைதான் குறைக்கப்பட்டுள்ளதேயொழிய, அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. ஆகவே, தற்போது அவர்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்தது.
அது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்கள், அதாவது தண்டனைக்காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன், தங்கள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அவர்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.