ஜப்பானின் மேற்குப் பகுதியிலுள்ள ஷிமானே (Shimane) மாகாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.
ஜப்பானிய நேரப்படி இன்று முற்பகல் 10:18 மணி. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. (அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை 5.8 எனக் கணித்துள்ளது).
ஜப்பானிய நிலநடுக்கத் தீவிரத்தன்மை அளவுகோலின் (Shindo Scale) படி, இது ‘Upper 5’ (5-க்கும் அதிகமான) நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் கனரக தளபாடங்கள் சரிந்து விழும் வாய்ப்புள்ளது. ஷிமானே மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டிருந்தது.
முதலாவது நிலநடுக்கம் ஏற்பட்டு 10 நிமிடங்களில் யசுகி (Yasugi) பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 4.5, 3.8 மற்றும் 5.4 ரிக்டர் அளவுகளில் பல பின்னதிர்வுகள் (Aftershocks) ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கம் மற்றும் மின்சாரத் தடை காரணமாக ஹிரோஷிமா மற்றும் ஒகாயாமா இடையிலான ‘ஷின்கான்சென்’ (Shinkansen) அதிவேக புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இப்பகுதிக்கு அருகிலுள்ள ஷிமானே அணுமின் நிலையத்தில் எவ்வித பாதிப்புகளோ அல்லது கதிர்வீச்சு கசிவுகளோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கங்களால் கடல் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், எவ்வித சுனாமி எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இருப்பினும், பொதுமக்கள் அடுத்த சில நாட்களுக்கு ஏற்படக்கூடிய வலிமையான பின்னதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

