துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை, எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் கும்பலைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் 206 பேர் பலியாகினர்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தலிபான் நடத்திய தாக்குதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதல்களுக்குப் பின்னர், கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கின. அதன் ஒரு பகுதியாக, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால், இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையின் சமீபத்திய சுற்று, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் உடன்பாடின்றி முறிந்துள்ளது.

