பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட லொறிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்
பிரித்தானியாவில், படகொன்றில் கொண்டுவரப்பட்ட குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிற்குள் அடைபட்டிருந்த புலம்பெயர்ந்தோர் ஆறு பேர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை 9.40 மணியளவில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் படகொன்று தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு சசெக்சிலுள்ள Newhaven என்னுமிடத்துக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர், மருத்துவ உதவிக்குழுவினருடன் பொலிசார் விரைந்துள்ளனர்.
அப்போது படகொன்றில் வந்த குளிரூட்டபட்ட லொறி ஒன்றிற்குள் புலம்பெயர்ந்தோர் சிலர் அடைபட்டிருப்பது தெரியவரவே, உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு, எசெக்சில் இதேபோல லொறி ஒன்றிற்குள் அடைபட்டிருந்த 39 புலம்பெயர்ந்தோர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
அதிர்ஷ்டவசமாக, இம்முறை லொறிக்குள் அடைபட்டிருந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள். பெரும் அசம்பாவிதம் ஒன்று தவிர்க்கப்பட்டாலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Comments are closed.