இத்தாலியில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு
இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தின்போது 2 வயது குழந்தை ஒருவர் பலியாகியுள்ளதுடன் 8 பேர் காணாமல்போயுள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 40 புலம்பெயர்ந்தோர் குறித்த படகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலிய கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோன்று மற்றொரு படகில் நடுக்கடலில் சிக்கி தவித்த 576 புலம்பெயர்ந்தோரும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியின் தெற்கே உள்ள லம்பேடுசா தீவு என்பது பல ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்தோர் பெருமளவில் வருகை தரும் இடம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த ஆண்டு (2023) மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இத்தாலி கடல் வழியாக புலம் பெயர்ந்துள்ளதாக இத்தாலி உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலி அல்லது மால்டாவிற்கு மத்தியதரைக் கடல் வழியாக கடந்து செல்வது உலகின் மிகவும் ஆபத்தான பயணம் என்பதுடன் இந்த வழியில் பயணித்தவர்களில் 2,200 பேர் காணாமல் போய் இருப்பதாக இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.