மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா நகரில், கால்பந்து மைதானம் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
கால்பந்து போட்டி ஒன்று முடிவடைந்த வேளையில், திடீரென மைதானத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.
இந்தத் கொடூரத் தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொத்தம் 11 பேர் பலியாகியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஒரு பரந்த “குற்ற அலையின்” (Crime Wave) ஒரு பகுதி என சாலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ வர்ணித்துள்ளார். மேலும், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த உதவுமாறு மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமிடம் அவர் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
குவானாஜுவாடோ மாநில வழக்கறிஞர் அலுவலகம் இது குறித்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்த கூட்டாட்சி அதிகாரிகளுடன் (Federal Authorities) இணைந்து செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளை அச்சுறுத்தி பணிய வைக்க முயற்சிக்கும் குற்றவியல் கும்பல்களின் இத்தகைய செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என மேயர் சீசர் பிரிட்டோ தனது முகநூல் பக்கத்தில் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.