அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை சைபர்புல்லிங், நிதி மோசடிகள் மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற இணைய வழி வன்முறைகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் (Fahmi Fadzil), அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடுகளை விதிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக நேற்று (நவம்பர் 23) தெரிவித்தார்.
சிறுவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்குச் சமூக ஊடகங்களினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமையினால் உலகளாவிய ரீதியில் கவலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மனநல நெருக்கடியை ஏற்படுத்தியமை தொடர்பில் டிக்டொக், ஸ்னாப்சாட், கூகுள் மற்றும் மெட்டா தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மலேசியா இந்தக் கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியாவைப் போலவே விதிக்கத் திட்டமிடுகிறது. அவுஸ்திரேலியாவிலும் 16 வயதுக்குட்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகள் எதிர்வரும் மாதம் செயலிழக்கச் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.