ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம் 28-ம் திகதி ஆரம்பமான மக்கள் போராட்டம், தற்போது நாடு தழுவிய ரீதியில் ஒரு புரட்சியாக உருவெடுத்துள்ளது.
விண்ணைத் தொடும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு (Ayatollah Ali Khamenei) எதிராக அனைத்து மாகாணங்களிலும் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு இராணுவ ரீதியிலான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரானிய அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ தகவல்படி, இதுவரை 5,000 பேர் உயிரிழந்துள்ளனர் (இதில் 500 பேர் பாதுகாப்புப் படையினர்). இருப்பினும், உண்மையான பலி எண்ணிக்கை 15,000-க்கும் அதிகம் இருக்கலாம் எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 30,000-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு ‘கடவுளுக்கு எதிரானவர்கள்’ (Moharebeh) என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
போராட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியே பரவுவதைத் தடுக்கவும், போராட்டக்காரர்கள் ஒருங்கிணைவதைத் தவிர்க்கவும் ஈரான் முழுவதும் இணையத்தள சேவைகள் (Internet) முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
அரசு கட்டிடங்களுக்குத் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களால் ஈரான் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது ஈரான் அரசு மேற்கொண்டு வரும் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் தங்களது கவலைகளைத் தெரிவித்து வருகின்றன.