ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

default

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது நாட்டின் 180 நகரங்களுக்குப் பரவி, 14-வது நாளாகத் தீவிரமடைந்துள்ளது.

பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களில் இதுவரை குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 சிறுவர்களும் அடங்குவர் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. (சில ஊடகங்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றன).

நாடு முழுவதும் இதுவரை 2,600-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வைத்தியசாலைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், இரத்தப் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, இந்தப் போராட்டங்களை “அமெரிக்காவை மகிழ்விப்பதற்காக முன்னெடுக்கப்படும் நாசவேலை” எனச் சாடியுள்ளார்.

“போராட்டங்களில் ஈடுபடுவோர் ‘கடவுளின் எதிரிகளாக’ (Enemies of God) கருதப்படுவார்கள். இது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்” என அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

ஐ.நா.விற்கு கடிதம்: ஈரானை நிலைகுலையச் செய்ய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூண்டுதல்களை வழங்குவதாகக் குற்றம்சாட்டி, ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய மக்கள் சுதந்திரத்தை எதிர்பார்ப்பதாகவும், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் வன்முறையைப் பயன்படுத்தினால் அமெரிக்கா இராணுவ ரீதியாகத் தலையிடத் தயார் (Locked and Loaded) என்றும் எச்சரித்துள்ளார்.

 

 

Exit mobile version