ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வைக்கப்பட்ட விடயத்தைக் கிளறும் ஊடகங்கள்
கனேடிய குடிமகன் ஒருவர், கனடா மண்ணில் வைத்தே கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இப்படி கனேடிய பிரதமரே அனுதாபம் தெரிவிக்கும் அந்த கனேடிய குடிமகன் யார் என்று பார்த்தால், அவர் பெயர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர். அவர், காலிஸ்தான் என்னும் பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடைய, ஒரு சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவர்.
இந்தியாவில் பிறந்த நிஜ்ஜர், 1997ஆம் ஆண்டு, ரவி ஷர்மா என்ற பெயரில், போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு அகதிக் கோரிக்கை வைத்தார். பல மோசடிகள் செய்து, பின்னர் 2007இல்தான் கனேடிய குடியுரிமை பெற்றார் நிஜ்ஜர்.
இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளியான இந்த நிஜ்ஜர் கொல்லப்பட்டதற்குத்தான் கனேடிய பிரதமர் ட்ரூடோ இவ்வளவு கொந்தளிக்கிறார்.
காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஏற்கனவே நடந்த விமான குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றை ஊடகங்கள் கிளறத் துவங்கியுள்ளன.
38ஆண்டுகளுக்கு முன்பு கனேடியர்கள் உட்பட 329 பேர் பயணித்த ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அதன் பின்னணியிலும் சீக்கிய பிரிவினைவாதிகள் இருப்பதாகத்தான் கனேடிய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
1985ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 23ஆம் திகதி, கனடாவிலிருந்து லண்டன் வழியாக இந்தியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, அட்லாண்டிக் சமுத்திரத்தின்மீது பறந்துகொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த கோர விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த 329 பேருமே கொல்லப்பட்டார்கள். அவர்களில் 280 பேர் இந்தியாவுக்குச் சென்றுகொண்டிருந்த கனேடியர்கள். அவர்களில் 86 பேர் சிறுபிள்ளைகள்!
1984ஆம் ஆண்டு, சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவிலுக்குள் இராணுவம் நுழைந்ததை எதிர்த்து, சீக்கிய தீவிரவாதிகள் இந்த விமானத்தில் குண்டு வைத்ததாக கனேடிய சட்டத்தரணிகள் வாதிட்டார்கள்.
அந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் Talwinder Singh Parmar என்ற நபர், இந்தியாவில் பொலிசாரால் கொல்லப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
அவர்களில் ஒருவர் Ripudaman Singh Malik. இந்த மாலிக், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டார். இந்த மாலிக்கின் கொலைக்கும் நிஜ்ஜருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆக, இப்படிப்பட்ட ஒருவருக்காகத்தான் இப்போது இந்தியாவுடனான உறவையே சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது போன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடத் துவங்கியுள்ளன.

