இம்ரானின் உயிருக்கு ஆபத்து; மனைவி கோரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, அட்டாக் சிறையில் அவருக்கு விஷம் வைத்து கொல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
புஷ்ரா பீபி பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில், தனது கணவர் இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அவரை அட்டாக் சிறையில் இருந்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலாவுக்கு மாற்ற வேண்டும் என்றும் புஷ்ரா பீபி கோரினார்.
“எந்தவித நியாயமும் இல்லாமல் எனது கணவர் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டப்படி எனது கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும்” என புஷ்ரா பீபி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
70 வயதான பிடிஐ தலைவரின் சமூக மற்றும் அரசியல் நிலையை கருத்தில் கொண்டு, சிறையில் பி வகுப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும். அட்டாக் சிறையில் இம்ரான் கான் விஷம் வைத்து கொல்லப்பட வாய்ப்புள்ளது. அவர் இரண்டு கொலை முயற்சிகளை சந்தித்துள்ளார். அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இம்ரானின் உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. தான் பயப்படுவதாக அந்த கடிதத்தில் புஷ்ரா பீபி குறிப்பிட்டுள்ளார்.
தோஷகானா ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் இம்ரான் கான் குற்றவாளி என அறிவித்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார்.
அவரை அடியாலா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பொலிஸார் அவரை கட்டி வைத்து சிறையில் அடைத்தனர். இம்ரான் ஆகஸ்ட் 5-ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஆட்சியில் இருந்தபோது வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க பரிசுப் பொருட்களை விற்றது தோஷ கானா வழக்கு.
Leave a comment