உக்ரைன் போரில் அதிகமான ஆயுதங்களை இழந்த பிறகு ரஷ்யா தங்களுடைய ராணுவ தளவாடங்களை திரும்ப வாங்க முயற்சித்து வருகிறது.
உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் இந்த போர் நடவடிக்கையில் அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிட்டத்தட்ட பல மில்லியன் மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
ராணுவ வீரர்களின் அதிகப்படியான இழப்பு மற்றும் ராணுவ தளவாடங்களின் இழப்பு ஆகியவை ரஷ்யாவை இந்த போர் நடவடிக்கையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனுடனான போரில் அதிகப்படியான ஆயுத இழப்பு காரணமாக பிற நாடுகளுக்கு விற்பனை செய்த ராணுவ தளவாடங்களை ரஷ்யா திரும்ப பெற முயற்சித்து வருகிறது.
இது குறித்து தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா பல ஆண்டுகளாக ஆயுத வர்த்தகத்தை செய்து வரும் நிலையில், பாகிஸ்தான், எகிப்து, பெலாரஸ் மற்றும் பிரேசில் ஆகிய பிற நாடுகளிடம் விற்பனை செய்த ஆயுதங்களை திரும்ப வாங்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
அவற்றில் குறிப்பாக ரஷ்ய கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர்களில் உள்ள இயந்திரங்களை வாங்க ரஷ்யா விரும்புகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக முன்கள போர் வரிசையில் ரஷ்யா அதிகப்படியான இழப்புகளை சந்தித்ததே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.