புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், தற்போதைய ஆண்டு எது என்பது குறித்த தெளிவின்றி கூகுள் தேடுபொறியின் (Google Search) செயற்கை நுண்ணறிவு (AI) வழங்கிய பதில்கள் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
“2027 அடுத்த வருடமா?” எனப் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, கூகுள் AI பின்வருமாறு முரணான பதில்களை வழங்கியுள்ளது.
முதலில், “இல்லை, 2026 தான் அடுத்த வருடம்” எனப் பதிலளித்துள்ளது (இதன் மூலம் தற்போதைய ஆண்டு 2025 என அது கருதுகிறது).
ஆனால் அதே பதிலின் அடுத்த பகுதியில், தற்போதைய ஆண்டு 2026 என்றும், அடுத்த ஆண்டு 2027 என்றும் சரியாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த முரண்பாடான ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தத் தவற்றினை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த ஒரு பயனர், கூகுளை விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலளித்த ஈலான் மஸ்க், “இந்தத் தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்” எனச் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே மஸ்க்கின் ‘குரோக்’ (Grok) AI தொழில்நுட்பமும் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையில், இப்போது கூகுளும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கூகுள் AI இவ்வாறான ஆபத்தான அல்லது தவறான தகவல்களை வழங்குவது இது முதல் முறையல்ல பிட்சாவில் பசை (Glue) சேர்த்துச் சாப்பிடலாம் என்றும், விட்டமின்கள் கிடைக்கப் பாறைகளைச் சாப்பிடலாம் என்றும் முன்னதாகப் பதிலளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவத் தவறுகள்: உடல்நலம் தொடர்பாக மோசமான ஆலோசனைகளை வழங்குவதாக ஊடகங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் இன்னும் முழுமையாக முதிர்ச்சியடையவில்லை என்பதால், முக்கியமான விபரங்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகளுக்கு மக்கள் தேடுபொறிகளை மாத்திரம் நம்ப வேண்டாம் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.